திருவள்ளூர்: உலகமே நம்மை உற்று நோக்கும் வகையில் கல்வியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பத்தில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘’தமிழ் கனவு என்ற தமிழ் மரபு’’ மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், பிரதியுஷா பொறியியல் கல்லூரி இயக்குனர் பியூலா தேவமலர், திருவள்ளூர் வட்டாட்சியர் என்.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது; தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில், மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பபடுகிறது. உலகமே தமிழகத்தை உற்றுநோக்கும் அளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தை பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
இன்றைய தலைமுறை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பட்டதாரிகளாக இருப்பதே மிக குறைவே. ஆனால், தற்போது அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வி முடித்து, பட்டப்படிப்பினை தொடர்ந்து பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதே கல்வி புரட்சியாகும். 2021ல் தமிழ்நாடு முதலமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீதம் மாணவர்களுக்கு தொழில் பணிகளுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
கல்வி என்பது மிகவும் முக்கியமானது. உங்களுக்கான தனித்திறமைகள்தான் உங்களுக்கான மதிப்பை பெற்றுத் தரும். அந்த திறமையை தயவு செய்து கண்டிப்பாக படித்த பிள்ளைகள் யாராக இருந்தாலும் உலகத்தில் உங்களுக்கான ஒரு நாற்காலி காத்துக்கொண்டிருக்கிறது என்கின்ற நம்பிக்கையை அளித்திடும் விதமாக இன்றைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.
நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிகாத்து அடுத்த தலைமுறையினர் பின்பற்றும் வண்ணம் கொண்டு செல்லவேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி சாதனை புரிய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.