கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த கட்சி நிர்வாகியையும் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவு!

அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

இதில், கடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன் கட்சி நிர்வாகியையும் அமைச்சர் தட்டி தூக்கிவந்து முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்துள்ளார்.

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை தொடங்கவில்லை.

திமுக ஆட்சிக்காக மட்டுமல்ல. ஏழை எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தமிழ் இனத்துக்காக தொடங்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் திடீர் திடீரென தோன்றும் கட்சிகள், கட்சியை தொடங்கும்போதே நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்கின்றனர். ஆனால் பின்னர். அனாதைகளாக அலைகின்றனர்.

1949 ல் தொடங்கிய திமுக முதன்முதலில் தேர்தல் களத்தில் 57-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் இறங்கியது. அதுவும் தேர்தலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பதை தொண்டர்கள்  முடிவு செய்யுமாறு கோரி, அவர்களின் முடிவுப்படியே தேர்தலில் போட்டியிட்டோம்.

பின்னர் திமுக சார்பில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். குளித்தலை தொகுதியில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 50 பேர் வெற்றி பெற்றோம். 67 ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றோம். 

1949 ல் கட்சி தொடங்கினாலும் 1967 -ல் தான் ஆட்சி அமைத்தோம். அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டுதான இருந்தார். ஆனால் அவரது திட்டங்களில் சீர்திருத்த திட்டம், இருமொழிக்கொள்கை, தமிழ்நாடு என பெயர் சூட்டியது என 3 தீர்மானங்கள் தமிழர்களுக்கு பெருமை.

1971 ல் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அவர் 5 முறை முதலமைச்சராக இருந்தபோது பட்ட இன்னல்கள் அதிகம்.

இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு 6 வது முறையாக எனது தலைமையில் ஆட்சி நடக்கிறது. வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத கட்சி திமுக. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்து வருகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.