ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இளைஞர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
பல மில்லியன் யூரோக்கள் கேட்ட இளைஞர்
நேற்று மாலை 4.30 மணியளவில், தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்ற நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த சுமார் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டுள்ளார்.
அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பல மில்லியன் யூரோக்கள் கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார் அந்த இளைஞர்.
பொலிசார் அதிரடி
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அந்த இளைஞருடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த இளைஞர் எதற்கும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே, இரவு 9.10 மணியளவில் பொலிசாரின் சிறப்புப் படையினர் அதிரடியாக அந்த மருந்தகத்துக்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என பொலிசாருக்கு அறிமுகம் ஆனவர் ஆவார்.
இதற்கிடையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டவர்களில் ஒரு பெண், கைது செய்யப்பட்ட இளைஞரின் கூட்டாளியாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அதை உறுதி செய்வதற்கான விசாரணையில் பொலிசார் இறங்கியுள்ளனர்.