புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து | மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை ஆளுநர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிமுக வலியறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (மார்.11) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரியின் நியாயமான கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக தெரிகிறது. மாநில அந்தஸ்து தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாஜக தலைவர் ஒரு முரண்பாடான கருத்தை தெரிவித்தார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் புதுச்சேரியில் இருந்து பிரிக்கப்படும் என்ற தவறான கருத்தை பாஜக எம்எல்ஏ பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த தவறான கருத்துக்கு திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் சரியான விளக்கத்தை கூறவில்லை. யூனியன் பிதேசமான புதுச்சேரியை இன்று வரை டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஆட்சி செய்ய கூடிய இந்த சூழ்நிலையில் 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் ஏன் நம்மால் நிர்வாகம் செய்ய முடியாது.

மாநில அந்தஸ்து சம்பந்தமாக ஒரு உறுதியான நிலைபாட்டை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏகமானதாக எம்எல்ஏக்கள் துணையோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவைத் தலைவர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட அனைத்து தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து பெறக்கூடிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி அதனை துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அவர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்ப முதல்வர் ஒரு உறுதியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை துணைநிலை ஆளுநர் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதேபோல் மாநில பாஜகவின் நிலைபாடு என்ன என்பதையும் பாஜக தெரிவிக்க வேண்டும்.

கொசுத்தொல்லையால் புதுச்சேரியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் டெங்குவால் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு புதுச்சேரி மருத்தவமனையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தப்படாததால் அதிகப்படியான நோயாளிகள் தரையிலும், ஒரு படுக்கையில் 3 நோயாளிகள் படுக்க கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இதில் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்க கூடிய வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் 30 படுக்கை வசதிகளையாவது ஏற்படுத்தித் தர வேண்டும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொசுத்தொல்லையை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும். செயல்படாமல் உள்ள அரசு கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு முகாம்களை அமைக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.