சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும்.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி, குறைந்த பட்சமாக நாமக்கல்லில் 17 டிகிரி, உதகையில் 8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.