சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வரும் ஜார்ஜ் ஆபிரகாம் மீது 23 வயதான ஒரு மாணவி கடந்த டிசம்பர் 2ம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தன்னிடம் பாலியல் ரீதியாக ஈடுபடுவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உடற்கல்வி கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் மாணவிக்கு உதவி செய்வதை போல உரையாடி, அந்த மாணவியின் கைப்பேசி எண்ணை கல்லூரியின் முதல்வர் வாங்கியுள்ளார்.
அதன் பின் அந்த மாணவிக்கு வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில் விளையாட்டு பயிற்சி உயர் வாய்ப்பு குறித்து உதவி செய்ததாக தெரிவித்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த மாணவியை அழைத்ததாக தெரியவந்தது. மேலும் பல ஆபாச குறுஞ்செய்திகளையும் கல்லூரி முதல்வர் அந்த மாணவிக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன கல்லூரி மாணவி கல்லூரி முதல்வர் சார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவியின் செல்போனுக்கு அத்துமீறி குறுஞ்செய்தி அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது பாலியல் துன்புறுத்தல் 354ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையாளர் கிரிஸ்டின் ஜெயஸ்ரீ அந்த கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை செய்திருந்தனர்.
இந்த நிலையில் மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.