பெர்த் : உலகிலேயே தங்கக் கட்டிகள் அதிகளவில் தயாரிக்கும் மிகப் பெரிய ஆஸ்திரேலிய ஆலை, தரம் குறைந்த தங்கத்தை சீனாவுக்கு விற்றுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதை மூடி மறைக்கும் வேலை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கட்டுப்பாடு
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமைந்துள்ள, ௧௨௫ ஆண்டுகள் பழமையான, ‘கோல்டு கார்ப்பரேஷன்’ என்ற ஆலை, தங்கக் கட்டிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் தங்கக் கட்டிகள் தயாரிக்கும் ஆலையாக இது உள்ளது. இந்த ஆலையில் இருந்து, நம் அண்டை நாடான சீனாவின், ‘ஷாங்காய் கோல்டு எக்ஸ்சேஞ்ச்’ என்ற அமைப்பு தங்கக் கட்டி களை வாங்கி வருகிறது.
தரத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ஷாங்காய் அமைப்பு நிர்ணயித்துள்ளது.
கடந்த, ௨௦௧௮ல் உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக தங்கக் கட்டிகளில், வெள்ளி மற்றும் செம்பு கலக்கும் திட்டத்தை பெர்த் ஆலை துவக்கியது.
ஆயினும் இந்த ஆலை தயாரிக்கும் தங்கத் தின் தரம், ௯௯.௯ சதவீதம் துாய்மையானதாகும். ஆனால், இது ஷாங்காய் தங்கச் சந்தையின் தரக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது.
இந்த வகையில், மூன்று ஆண்டுகளாக தரம் குறைந்த தங்கக் கட்டிகளை சீனாவுக்கு, பெர்த் ஆலை அனுப்பி வந்துள்ளது. இடையில், சில தங்கக் கட்டிகளை பரிசோதித்த ஷாங்காய் அமைப்பு, அதன் தரம் குறித்து பெர்த் ஆலைக்கு தகவல் தெரிவித்தது.
இது தொடர்பாக பெர்த் ஆலை உடனடியாக ஆய்வு செய்தது. இதில், தரம் குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
தங்களுடைய மதிப்பு குறைந்துவிடும் என்பதால், மூடி மறைக்கும் வேலையில் அந்த ஆலை நிர்வாகம் இறங்கியது.
ஷாங்காய் தங்கச் சந்தை குறிப்பிட்ட அந்த சில தங்கக் கட்டிகளை மட்டும் திரும்ப வாங்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, தங்கக் கட்டியில் வெள்ளி கலப்பதை நிறுத்தியது. இதையடுத்து இந்தப் பிரச்னை சுமுகமாக முடிந்தது.
விசாரணை
இருப்பினும், உண்மையில், மூன்று ஆண்டுகளில், ௭௪ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 டன் தங்கக் கட்டிகளை பெர்த் ஆலை அனுப்பிஇருந்தது.
அவற்றை திரும்பப் பெற ஷாங்காய் தங்கச் சந்தை கூறியிருந்தால், மிகப் பெரும் பொருளாதார சிக்கலில் பெர்த் சிக்கியிருக்கும். மேலும், தன் மதிப்பை அது இழந்திருக்கும்.
இந்த விவகாரத்தில், பெர்த் ஆலை நிர்வாகம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்கள் தற்போது கசிந்துள்ளன. அதில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள தங்கம், வெள்ளி வர்த்தக சந்தை கழகமும் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்