புதுடெல்லி: அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோ 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இருவரும் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முன்னுரிமைகள், இருதரப்பு முதலீடு, வர்த்தகத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விவாதித்தனர். அதை தொடர்ந்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்தார். நேற்று முன்தினம் பிரதமர் மோடியை ரைமண்டோ சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் டிவிட்டரில் பதிவிடுகையில், அமெரிக்க அமைச்சர் ரைமண்டோ உடனான சந்திப்பு பலன் அளிக்கும் வகையில் இருந்தது என குறிப்பிட்டுள்ளது.