தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. இதில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை படி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 அதாவது நாளை முதல் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை பார்வை இடுவதற்கு பல்வேறு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.