மருந்து தேவை… ராகுலை மீண்டும் விமர்சனம் செய்த துணை ஜனாதிபதி

மீரட்: நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுகிறது என்று விமர்சனம் செய்த ராகுல்காந்தியை மீண்டும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லண்டன் சுற்றுப்பயணம் சென்று இருந்த போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் எம்.பி வீரேந்திர ஷர்மாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சில்,’ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் போது மைக்குகள் அணைக்கப்படுகின்றன’ என்று பேசினார். இதற்கு பா.ஜ கண்டனம் தெரிவித்து இருந்தது.

ஆனால் மரபை மீறி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் ராகுலை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. ‘மாநிலங்களவை தலைவர் பதவியை வகிக்கும் துணை ஜனாதிபதி நடுவர் போன்று செயல்பட வேண்டும். ஆளும் கட்சியின் சியர்லீடராக இருக்க கூடாது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தார். நேற்று உபி மாநிலம் மீரட்டில் நடந்த ஆயுர்வேத நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மீண்டும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய நாடாளுமன்றத்தில் மைக்குகள் அணைக்கப்படுவதாக சிலர் கதை விடுகிறார்கள். இதைவிட பொய்யாக எதுவும் இருக்க முடியாது. இந்த குற்றச்சாட்டு தவறானது.  வெளிநாடு செல்லும்போது மக்கள் அவரை மரியாதையுடன் பார்க்கிறார்கள். இது இன்று இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால் சிலர் வெளிநாடுகளில் இருக்கும்போது இந்தியாவை அவதூறாகப் பேசுகிறார்கள்.மாநிலங்களவை தலைவராக இருப்பதால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்க, ஏதாவது மருந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அத்தகைய மருந்தை நீங்கள் தயாரிக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அங்கு எந்தவிதமான குழப்பங்களும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.