சென்னை: தற்கொலைகளுக்கு காரணமாகும் மிகவும் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தடை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்ற உட்பொருளை கொண்ட அபாயகரமான விஷத்தன்மை கொண்ட எலி மருந்து பேஸ்ட் நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்கொலைகளுக்கு காரணமாகும் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளான மோனோகுரோட்டோபாஸ், புரஃபனோபாஸ், குளோர்பைரிபாஸ், புரஃபனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் சைபர்மெத்ரின், அசிபேட் ஆகிய 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 90 நாட்கள் தடை விதித்து வேளாண் துறை அரசாணை பிறப்பித்திருந்தது.
இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான நிரந்தர தடை, மத்திய அரசால் பிறப்பிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தடைக் காலம் முடிவதால், தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிக அளவு விஷத்தன்மை கொண்டதாக உள்ளன. இவற்றை தனியாகவோ, பிற பூச்சிக்கொல்லி மருந்துகளோடு சேர்த்தோ பயன்படுத்தும்போது, மனிதன் அல்லது விலங்குகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். இதனால், மேற்கண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளையும் மேலும் 60 நாட்களுக்கு விற்க, விநியோகிக்க, பிற மருந்துகளோடு சேர்த்து பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேபோல, சாணிபவுடரை தடை செய்வதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.