அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகள்: லிங்கை தொட்டால் பணம் அபேஸ்| Cybercrime Scams on the Rise: Money Abes for Clicking Link

புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்புது விதங்களில் அதிகரித்து வரும் சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
உலகையே உள்ளங்கையில் கொண்டு வரும் மொபைல் தொழில்நுட்பம், நமக்கு பல வகையில் பயனாக அமைந்தாலும், சில நேரம் இழப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் வங்கி பரிவர்த்தனைகள் கடினமாகவும், கால விரயத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது இன்டர்நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் வந்த பின், ஒரு நொடியில் அடுத்தவர் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது.

புதுச்சேரியில் 50 சதவீத்திற்கும் அதிகமான வங்கி கணக்குகள், மொபைல்போன் செயலி மூலம் பரிவர்த்தனைகள் நடக்கிறது. அதுதவிர சிறிய பெட்டிக் கடை, டீ கடை முதல் பெரிய கார் ேஷாரும், மால் வரை பொருட்கள் வாங்க, கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே என பல செயலிகள் மூலம் பணம்செலுத்தும் பழக்கம் வந்து விட்டது.
பணம் செலுத்தும் வசதிகள் எளிதானதுபோல், வங்கியில் இருந்து பணம் திருடும் வசதியும் எளிதாக மாறி வருகிறது.

முன்பெல்லாம் வங்கியில் இருந்து மேனேஜர் பேசுகிறேன். ஏ.டி.எம்., கார்டு லாக் ஆகிவிட்டது. பின் நம்பர் சொல்லுங்கள் எனக் கூறி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்தனர்.
இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதால், தற்போது புதுப்புது வழிகளில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும்முறைகளை மர்ம நபர்கள் பின்பற்ற துவக்கி விட்டனர்.

காரணம்

வங்கி கணக்குடன் ஆதார், மொபைல் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணம் மோசடி செய்யும் மர்ம நபர்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட பல புதுப்புது சாப்ட்வேர்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மொபைல் எண் மற்றும் ஒ.டி.பி., எண் தெரிந்தால் உடனே பணத்தை திருடி விடுவர்.
மர்ம நபர் அனுப்பும் லிங்கை தொட்டாலே, வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் புதிய தொழில்நுட்பத்தை மர்ம நபர்கள் தற்போது பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

அப்டேட் மோசடிகள்

உங்கள் மொபைல்போன் சிம் கார்டு 5 ஜி சேவை இயக்க, இந்த லிங்கை தொட்டுதகவல் பதிவிடவும் என எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். உங்கள் வீட்டின் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும். உங்களின் வங்கியின் மொபைல் பேங்கிங் லாக் ஆகிவிட்டது.

அப்பேட் செய்ய வேண்டும்என லிங்க் அனுப்புகின்றனர். பேன் கார்டு லிங்க் செய்து அப்டேட் செய்ய வேண்டும் என எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றனர்.
விபரம் தெரியாதவர்கள், அந்த லிங்கை தொட்டவுடன் ‘மிரர் ஆப்ஷன்’ சாப்ட்வேரை பயன்படுத்தி, நமது வங்கி கணக்கு தகவல்களையும், அதில் இருக்கின்ற பணத்தையும் திருடி விடுகின்றனர்.

latest tamil news

டவர் மோசடி

உங்களிடம் இடம் இருக்கிறது என தெரியும். அங்கே மொபைல்போன் டவர் அமைக்க வேண்டும். மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகை தருகிறோம் என எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.

தொடர்பு கொண்டால், முன் தொகையாக ரூ. 4 லட்சம் செலுத்த வேண்டும். 2, 3 இடங்கள் தேர்வு செய்துள்ளோம். ஆனால், உங்களுக்கு இந்த ஆப்பர் கொடுக்கிறோம் என கூறி பணத்தை பெற்று ஏமாற்றுகின்றனர்.

போலி இணையதள வேலை மோசடி

கொரோனாவுக்கு பிறகு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதை பயன்படுத்தி ஆன்லைனில் வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம். தினசரி ரூ.1500 முதல் ரூ.3000 சம்பாதிகக்கலாம் என எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். அதனை நம்பி செல்லும் நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால், ஊக்க தொகையுடன் திருப்பி அனுப்புகின்றனர்.

இதனை நம்பி பலரும் கடன் வாங்கி அந்த இணையதள கணக்கில் பணம் செலுத்துகின்றனர். ஓரிரு முறை அசலுடன் ஊக்க தொகை அளிக்கும் மர்ம கும்பல், தனியார் வேலை நிறுவன இணையதள கணக்கில் ரூ. 1 முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் செலுத்திய பின்பு, அந்த இணையதள கணக்கு முடக்கப்பட்டுகிறது. அதன் பின்பே அது போலி இணையதள கணக்கு என தெரிய வருகிறது.

கூகுள் பே மோசடி

அடையாளம் தெரியாத நபர் திடீரென போன் செய்து தங்களின் கூகுள் பே கணக்கில் தவறுதலாக பணம் செலுத்தி விட்டேன். திருப்பி அனுப்புங்கள் என கெஞ்சுகிறார். அதை நம்பி மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தும்போது, ‘மிரர் ஆப்ஷன்’ முறையில் பணம் செலுத்தும் நபரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர்.

சமூக வலைதள மோசடி

வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பெண் போல பல நாட்கள் பேசுவர். ஒரு நாள் திடீரென வீடியோ கால் வரும். அப்போது எதிர் முனையில் நிர்வாணமாக தோன்றுவார்.

ஒரு சில நிமிடம் மட்டுமே இந்த வீடியோ கால் வரும். அடுத்த சில நிமிடத்தில் வீடியோ காலில் பேசிய நபரின் புகைப்படத்தை வேறு ஒரு நிர்வாண உடலுடன் பொருத்தி, ஆபாச படம் பார்ப்பது போல் வீடியோ உருவாக்கி அவரது வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில்அனுப்புகின்றனர்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க பணம்கேட்டு மிரட்டி பெறுகின்றனர். வீடியோ வெளியே வந்தால் அசிங்கம் என அஞ்சும் நபர்கள் மர்ம நபர்கள் கேட்கும் பணத்தை அனுப்பி விடுகின்றனர்.

வெளிநாட்டு பரிசு மோசடி

வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் வெளிநாடுகளில் இருந்து பல மாதங்கள் பழகும் முகம் தெரியாத சிலர், உங்களுக்கு தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என ஏதேனும் ஒரு பண்டிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள பரிசு அனுப்பியுள்ளதாக கூறுவார்.

அடுத்த சில நாட்களில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி பேசுவதாகவும், பரிசு பொருளை பெற வரி செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பெற்றுக் கொண்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவர்.
இதுபோல் ஏராளமான மோசடிகள் தினம்தினம் புதுப்புது விதங்களில் அவதாரம் எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்

சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபடும் நபர்கள், வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இதை மேற்கொள்கின்றனர். அங்கு சென்று விசாரித்தால், போலி ஆதார் மூலம் பெற்ற மொபைல்போன் மூலம் மோசடி செய்வது தெரியவரும். தொடர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய சைபர் கிரைமில் போதிய ஆட்கள் இல்லை.இதுவரை பதிவு செய்த வழக்குகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. எனவே, பொதுமக்கள் விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருந்தால் மட்டுமே தமது பணத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.

மக்களே உஷார் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியில் சைபர் கிரைம் அதிக அளவில் அரங்கேறுவதால், கடந்தாண்டு நவீன வசதிகளுடன் கூடிய சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கோரிமேடு போலீஸ் மைதானம் அருகே அமைத்து செயல்பட்டு வருகிறது.போலீசார் கூறுகையில், ‘பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, மர்ம நபர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., லிங்கை தொடக்கூடாது. சமூக வலைதளத்தில் பழகும் முகம் தெரியாத நபர் பரிசு அனுப்புவதாக கூறினால், எதற்காக பரிசு அனுப்புகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் வேலை எனக்கூறி பணம் செலுத்த கூறினால் பணம் செலுத்தக்கூடாது. சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டினால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.