புதுடெல்லி: நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய கருத்தரங்குகளை 12 விதமான தலைப்புகளில் மத்திய அரசு நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். நேற்றைய கருத்தரங்கில் பிரத மரின் விஸ்வகர்மா கவுசல் சம்மான் (விகாஸ்) திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: உள்நாட்டு கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு கைவினைக் கலைஞர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். தொலைதூர பகுதிகளில் வாழும் இந்த கைவினை கலைஞர்களுக்கு உதவவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும் ஒரு அமைப்பு போல் செயல்பட வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு எளிதான கடன் வசதி, பிராண்டு ஊக்குவிப்பு போன்ற முழுமையான நிறுவன ஆதரவை விகாஸ் திட்டம் வழங்கவுள்ளது.
இன்றைய கைவினை கலைஞர்களை நாளைய தொழில்முனைவோர்களாக ஆக்குவதுதான் நமது லட்சியம். கைவினை கலைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது, அவர்களுக்கு எளிதான கடன் வசதியை உறுதி செய்வது, அவர்களின் தயாரிப்புபொருட்களுக்கு பிராண்டு ஊக்குவிப்பு அளிப்பது ஆகியவைதான் பி.எம் விகாஸ் திட்டத்தின் நோக்கம்.அப்போதுதான் அவர்களது தயாரிப்புகள் விரைவாக விற்பனைக்கு செல்லும். இத்திட்டம் கைவினை கலைஞர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களை வழிநடத்தும்.
திறன் இந்தியா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயிற்சி பெறுகின்றனர். உள்ளூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு கைவினை கலைஞர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.