தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் மூடிகளும், கழிவுநீர் தொட்டி மூடிகளும் பெயர்ந்து காணப்படுகின்றன. தகரத்தினால் செய்யப்பட்ட இந்த மூடிகள் பல ஆண்டுகளாக கவனிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தற்போது துருப்பிடித்த நிலையில், பெயர்ந்து காணப்படுகின்றன.
கழிவுநீர் வெளியேறும் இடங்களும், கழிவுநீர் தொட்டிகள் இருக்கும் இடங்களும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் பாதிப்புகளுடன் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளுக்கு, இந்த சுகாதாரச் சீர்கேட்டால் உடல் நிலை மோசமாகும் அபாயம் நிலவுவதாக மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் பைப்புகள் உடைந்து தண்ணீர் தேங்கியிருப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சுகாதாரச் சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் நலனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே, இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வோரின் கோரிக்கையாக இருக்கிறது.