திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக துவங்கியது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா இன்று (12ம் தேதி) காலை துவங்கியது. இதையொட்டி அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தட்டுகளில் பூக்களை ஏந்தி யானையுடன் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இன்று மற்றும் 19, 26, ஏப்ரல் 2 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
இந்த நாட்களில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றுவர். ஏப்ரல் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடக்கிறது. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்கள் கிடைக்க வேண்டுமென ஆண்டுதோறும் மாசிமாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும்.
இந்த 28 நாட்களும் கோயிலில் அம்பாளுக்கு தளிகை, நைவேத்தியம் படைப்பது கிடையாது. இந்தாண்டு இன்று முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார். 28 நாட்களும் அம்மனுக்கு துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம், இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும். பூச்சொரிதல் விழாவில் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வதை தொடர்ந்து பக்தர்களுக்கு நீர், மோர், பானகம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் கட்டணமில்லா தரிசனம் இன்று முதல் நாளை காலை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 இடங்களில் மருத்துவ முகாம்: பூச்சொரிதல் விழாவையொட்டி கோயில் திருமண மண்டபம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமயபுரம் கடைவீதி பியூஇ பள்ளி, நால்ரோட்டில் உள்ள ஏகேஆர் லாட்ஜ், கோயில் முதலுதவி மருத்துவ மையம் என 5 இடங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருந்திட்ட வளாகம், தரிசன வரிசை, உள்பிரகாரங்கள் மற்றும் கோயில் வளாகத்தில் தங்கு தடையின்றி கிடைக்குமாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.