கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ (Road Show) நடத்தினார். அப்போது மலர்களை தூவி பிரதமரை பொதுமக்கள் வரவேற்றனர். இதையடுத்து 8,478 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 118 கிலோமீட்டர் தூரமுள்ள பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புதிய திட்டங்கள் தொடக்கம்
இது தேசிய நெடுஞ்சாலை 275ஐ (NH-275) சேர்ந்தது. இதையடுத்து மைசூரு – குஷாலநகர் இடையில் நான்கு வழி சாலைக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஐஐடி தார்வாத்தை (IIT Dharwat) தொடங்கி வைத்தார். மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே
பின்னர் மாண்டியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, டபுள் எஞ்சின் அரசின் நோக்கம் என்பது உங்கள் அன்பை பல மடங்கு திருப்பி கொடுப்பதே ஆகும். கடந்த சில நாட்களாக எக்ஸ்பிரஸ்வே பற்றிய பேச்சு தான் நாடு முழுவதும் நிலவி வந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இளைஞர்கள் மகிழ்ச்சி
பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்தால் இளைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் எல்லோருக்குமான வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. கர்நாடகாவில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது மாநிலம் தழுவிய அளவில் தொடர்பை வலுப்படுத்துகிறது.
கொட்டும் வருவாய்
பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் வேலைவாய்ப்பு, முதலீடுகள், புதிய தொழில்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கின்றன. நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்றன. புதிய வாய்ப்புகள் உண்டாக்கி தருகின்றன. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்கள் மிகவும் முக்கியமானவை.
உள்கட்டமைப்பு வசதிகள்
இவை இரண்டுக்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு. ஒன்று தொழில்நுட்பத்தில் தலைசிறந்தது என்றால் மற்றொன்று பாரம்பரியத்தில் பெருமை வாய்ந்தது. இவற்றை இணைப்பது மிக மிக முக்கியமானது. எங்கெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் இரண்டு பெயர்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். அவர்கள் கிருஷ்ண வாடியார், எம்.விஸ்வேஷ்வர ஐயர் ஆகியோர். இந்த இருவருமே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் ஆட்சி
இந்த எக்ஸ்பிரஸ்வே மூலம் பயண நேரம் குறைவதுடன், இதை ஒட்டியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியும் அடையும். 2014ஆம் ஆண்டிற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி ஏழை மக்களுக்காக ஒரு கல்லை கூட புரட்டி போடவில்லை. அவர்கள் ஏழைகளுக்கான பணத்தை கொள்ளை அடித்தார்கள். கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நீர்வளத்துறை திட்டங்கள் அனைத்தும் மிக வேகமாக முடிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.