தஞ்சாவூரில் முதன் முதலாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக பலரும் தாங்கள் வளர்க்கும் நாய்களை அழைத்து வந்தனர். தங்களின் நாய்களுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையில் மிருகவதை தடுப்புச் சங்கம் அமைந்துள்ளது. அதில் கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் நாய்கள் கண்காட்சி என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் அழகி, வெண்பா, பழம் என அழகு நாய்களுக்கு அழகிய தமிழில் பெயர் வைத்திருந்தது காண்போரை பெரிதும் கவர்ந்தது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் இருந்த நாய்களை குழந்தைபோல தூக்கி உற்சாகத்துடன் கெஞ்சி மகிழ்ந்தார். இதில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. நாய் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் செல்லப்பிராணியான தங்கள் நாய்களை பாதுகாப்பாகக் கவனித்துக்கொண்டதன் மூலம் நாய்களுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது.
அலங்கு, சிம்பா, டாபர் மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பிப்பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட இனங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கு பெற்றன. வித்யாசமான சிகை அலங்காரம், கலருக்கு ஏற்றார் போல் கழுத்தில் பெல்ட் என ஒவ்வொருவரும் தங்கள் நாயை அழகுபடுத்தியிருந்தனர். இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வந்த பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நாய்களைப் பார்த்து பரவசமடைந்தனர்.
கண்காட்சியில், சோழர்கள் போருக்கு பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் `அலங்கு’ இனத்தைச் சேர்ந்த நாய் கலந்துகொண்டது கவனம் பெற்றது. நாய்களுக்கான சாகச போட்டியில் எஜமானர்களின் சொல்லுக்கேற்ப நாய்கள் பலவேறு சாகசங்களைச் செய்தது. அதில் வென்ற நாய்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தாங்களே போட்டியில் பங்கெடுத்து வென்றதை போன்ற உணர்வை நாயின் எஜமானர்கள் அடைந்தனர். மேலும், இக்கண்காட்சியில் அரிய வகை பறவைகள், பெரிய அளவிலான ஓணான், சிலந்தி, பாம்பு ஆகியவையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரம்பர்ய நாய் இனங்களைப் பாதுகாக்கவும், செல்லப்பிராணிகள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தவுமே நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பலரும் தங்கள் செல்லப்பிராணியான நாய்களுடன் கலந்து கொண்டது நாய் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டியது” என்றார்.
இது குறித்து கண்காட்சி நிர்வாகத்தினர் சிலரிடம் பேசினோம், “பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் தென்னிந்திய நிலப்பரப்பில் ஆட்சி செய்தபோது `அலங்கு’ என்கிற நாய் இனத்தை வளர்த்து வந்துள்ளனர். ராஜராஜ சோழன் போர்ப்படையில் அலங்கு வகை நாய்கள் அங்கம் வகித்துள்ளன. யானை, குதிரைக்கு இணையாக போரில் அலங்கு நாய்கள் சண்டையிட்டுள்ளன.
எதிரி நாட்டு குதிரைப் படையைத் தாக்குவதற்கு அலங்கு இன நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அலங்கு இன நாய்கள் குறித்து தஞ்சாவூர் பெரியகோயிலில் ஓவியங்கள் இடம்பெற்றிருப்பது அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது. அலங்கு இனங்கள் தஞ்சாவூர், திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய புல்லிகுட்டா நாய் இனத்தில் மூதாதையர்களாக அலங்கு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்” என்றனர்.