பைக்கில் இடிப்பதுபோல் செல்வதா? என கேட்ட ஆசிரியரை தந்தையுடன் சேர்ந்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவன்: வீடியோ வைரல்; கல்வியாளர்கள் அதிர்ச்சி

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பைக்கில் இடிப்பதுபோல் வந்ததை கண்டித்ததால் ஆசிரியரை தந்தையுடன் சேர்ந்து 10ம் வகுப்பு மாணவன் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காலை வேளையில் ஆசிரியர் ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்கு பைக்கில் வந்திருந்த மாணவன் ஆசிரியரின் பைக் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த ஆசிரியர் பள்ளி மாணவனையும் அவரது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து  விசாரித்தார். அப்போது பள்ளி ஆசிரியரை தந்தையுடன் சேர்ந்து மாணவன் மிரட்டிய வீடியோ வைரலாகி கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில் ஆசிரியர் எதற்காக இடிப்பது போல் வந்தாய்? என கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‘ஆமாம் வந்தேன்.. எங்க போய் பார்த்துகிறீங்களோ பார்த்துக்கங்க சார்’ என அலட்சியமாக பதில் கூறினார். உடனே, மாணவனின் தந்தை, ‘அவன் பைக் ஓட்டினான்? உங்ககிட்ட லைசென்ஸ், ஹெல்மெட் இருக்கா?’ என ஆசிரியரை மிரட்டும் தொனியில் கேட்டார்.

இதற்கு ஆசிரியரும் பொறுமையாக, ‘லைசன்ஸ்,  ஹெல்மெட் ஆகியவை இருக்கு’ என காண்பித்தார். அங்கு இருந்த மற்றொரு ஆசிரியர், ‘தம்பி உனக்கு லைசென்ஸ் இருக்கா’ என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‘நீங்க யார் சார் என்கிட்ட கேட்க..? என்னிடம் லைசென்ஸ்லாம் கேட்கக்கூடாது. வாத்தியார்  பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும்தான் வர்ரீங்க;  எங்க கிட்ட லைசென்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது’ என்று மிகவும் அலட்சியமாகவும், அநாகரீகமாகவும் பதில் சொன்னான். மாணவருக்கு ஆதரவாக உடன் வந்த தந்தையும் பேசினார்.

உடனே, ஆசிரியர்கள் சேர்ந்து, ‘பையனுக்கும் புத்தி சொல்லிவிங்கன்னு பார்த்தால் நீங்களே மிரட்டுவதுபோல் எங்ககிட்ட கேள்வி கேக்குறீங்க, இந்த மாணவன்  சீருடை அணிந்து வந்தால் மட்டும் வகுப்பறையில் சேர்த்துக் கொள்வோம்’ என தெரிவித்தனர். அதற்கு அந்த மாணவன், ‘வாப்பா போலாம். என்னை எல்லாம் உட்கார வைக்கலனா எக்ஸாமே தேவையில்லை’ என கூறிவிட்டு தந்தையுடன் சென்று விடுகிறான். இதோடு வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாதா, பிதாவுக்கு அடுத்ததாக குரு உள்ளார். குரு இல்லையென்றால் ஒருவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஆனால், பிதாவும், பிள்ளையும் சேர்ந்து குருவை தூற்றி, கேவலமாக மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பும், கவலையையும் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.