எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது.
இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
“இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.
தாம்பத்திய உறவின் மீது கூச்சம், வெட்கம், அது தவறு என்கிற எண்ணங்கள் இருக்கக்கூடாது. வீட்டுக்குள் தனிமை கிடைக்க வேண்டும். பக்கத்து அறையிலோ, ஹாலிலோ பெரியவர்கள் படுத்திருக்கிறார்கள் என்கிற பதற்றம் இருக்கக்கூடாது. தாம்பத்திய உறவு நிகழ்வதற்கு முன்னால், கணவன் – மனைவி எந்தளவுக்கு அன்பாக, சுவாரஸ்யமாகப் பேசிக்கொள்கிறார்கள்; எந்தளவுக்கு ரிலாக்ஸாக இருக்கிறார்கள்; எந்தளவுக்கு உறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பனவற்றைப் பொறுத்தே ஆர்கசம் என்கிற உச்சக்கட்டம் நிகழும்.
ஆண்களுக்கு மனைவியைப் பார்த்தவுடனே விறைப்புத்தன்மை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்களுக்கு இப்படி உடனே நிகழாது. நேரம் எடுக்கும். பேசி, விளையாடி, பெண்ணுறுப்பில் திரவம் ஊறிய பிறகு உறவு கொண்டால், பெண்ணுக்கும் உச்சக்கட்டம் கிடைக்கும். இவையெல்லாம் உங்கள் தாம்பத்தியத்தில் நிகழ்ந்திருக்கின்றனவா? நிகழ்ந்தால் ஆர்கசம் கிடைக்கும்.
பெண் உணர்ச்சிவசப்படுவதற்கான தூண்டுதல் உடல்ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் கிடைக்க வேண்டும். ஆண்கள் இதைப் புரிந்து நடந்தால், ‘இதுவரைக்கும் அதை நான் உணர்ந்ததே இல்லை’ என்று எந்த மனைவியும் வருத்தப்பட மாட்டார்.
ஒருவேளை இத்தனை செய்தும் பெண்ணுக்கு ஆர்கசம் வரவில்லையென்றால், மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ஏனென்றால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாலும், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடும் கருத்தடை மாத்திரைகளாலும்கூட உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.