நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நேற்று பாமக சார்பில் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் குறைந்த அளவு பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயங்கின. கடைகள் ஒருசில இடங்களில் திறந்து இருந்தன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பக்கத்து மாவட்டங்களில் இருந்து காவல் துறையினர் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிவிரைவு படையினர் வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென்று வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு துறை உதவியுடன் தீயை போராடி அனைத்தனர். இருந்தபோதிலும் அதிவிரைவுப்படை வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. யாராவது மர்மநபர்கள் தீ வைத்தார்களா? அல்லது பேட்டரி கசிவு ஏற்பட்டு வாகனம் தீப்பிடித்து எரிந்ததா என்று பல கோணங்களில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.