நாட்டுப்புற பாடகரின் இசை நிகழ்ச்சியில் அவர் மீது பணமழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நேற்று குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர் குவிந்தனர். அப்போது கிர்திதன் காத்வியின் பாடலை கேட்ட மக்கள், பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.
ஒருகட்டத்தில் குதூகலமாகி தங்களிடம் இருந்த 10, 20,100 ரூபாய் கரன்சி நோட்டுகளை எடுத்து, மேடையை நோக்கி வீசினர். குஜராத்தில் இசை நிகழ்ச்சிகளில் இதுபோன்று பணம் பொழியும் சம்பவங்கள் மிகவும் பொதுவானவை.
ஆனாலும் குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வி மீது பண மழை பொழியும் நிகழ்வு வீடியோக எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று பாடகர் காத்வி கூறியுள்ளார்.
உடல்நலம் குன்றிய பசுக்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நல்ல காரியங்களுக்கு தனது இசை நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக இருப்பது மன நிறைவை தருகிறது என்று பாடகர் காத்வி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்சாரி கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காத்வி மீது சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10, 20, 100 ரூபாய் நோட்டுகள் பண மழையாக பொழிந்த நிகழ்வு நடந்தது.
newstm.in