செங்கல்பட்டில் தாட்கோ மூலம் துரித மின் இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலமாக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார். கடந்த ஆண்டு மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்தில், மின்மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900, பழங்குடியினருக்கு 100 என மொத்தம் 1000 எண்ணிக்கையில் புதிதாக துரித மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும், அவர்களின் பெயரில் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை  கிணறு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்பி (குதிரைத்திறன்) மின் இணைப்பு கட்டணம் ரூ.2.5 லட்சத்துக்கான 10 சதவீதம்  பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்பி (குதிரைத்திறன்) மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 லட்சத்துக்கான 10 சதவீதம்  பயனாளி பங்குத் தொகை ரூ.27,500, 10 எச்பி (குதிரைத்திறன்) மின்  இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்துக்கான 10 சதவீதம்  பயனாளி பங்குத் தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்பி (குதிரைத்திறன்) மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீதம்  பயனாளி பங்கு தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்களின் பங்கு தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

கடந்த 2017 முதல் 2022ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட  விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்கு தொகையுடன் புதிதாக துரித மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே மின் இணைப்பு  கோரி காத்திருப்பவர்ளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தாட்கோவின் இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், ‘அ’ பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரங்கள் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.