மதுரை: ”சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி கொண்டு இருக்கிறார் கே.பழனிசாமி” என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட சார்பில், கழக வளர்ச்சி பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவில்லத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி உதயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, நீதிபதி, கருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி உதயகுமார் பேசியதாவது: ”இயக்கத்திற்கு வந்த சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொண்டு கே.பழனிசாமி நெருப்பாற்றில் நீந்திக் கொண்டு இருக்கிறார். இந்த போராட்டத்தில் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறார். அதனாலே, தேனி, மதுரை ,விருதுநகர், திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு கே.பழனிசாமி வந்தபோது அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி காணப்பட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக, கே.பழனிசாமி தமிழக மக்களுக்கு திட்டங்களை அள்ளி அள்ளி வழங்கினார். ஆனால், இந்த 22 மாத திமுக ஆட்சியில், எந்த திட்டங்களும் மக்களுக்கு செயல்படுத்தவில்லை” இவ்வாறு அவர் பேசினார்.