இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலோடு, 400 தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறது. இதில் 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 16 ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும் அடங்கும்.
அதைத் தொடர்ந்து, தற்போது வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடும்விதமாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது குழுவுடன் கர்நாடகாவில் மூன்று சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், `தேர்தல் ஆணையத்துக்கு ஒவ்வொரு தேர்தலுமே அக்னி பரீட்சைதான்’ என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்திருக்கிறார். சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்காக கர்நாடக மக்கள், தேர்தல் ஆணையத்தை நம்புவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜிவ் குமார், “கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா தனது சமூக, கலாசார, அரசியல், புவியியல், பொருளாதார, மொழியியல் பிரச்னைகளுக்கு அமைதியான முறையிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வு கண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகளை மக்கள் நம்புவதால் மட்டுமே இத்தகைய ஜனநாயகம் சாத்தியமானது. இருப்பினும் தேர்தல் ஆணையத்துக்கு, ஒவ்வொரு தேர்தலுமே அக்னி பரீட்சைதான்” என்றார்.