போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக வந்த நபரை 8 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் படான் பகுதியை அடுத்து ஜியோனா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேசானா என்ற பகுதியை சேர்ந்த ஹர்திக் சுதார் (25) என்ற இளைஞர் அங்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த மறுவாழ்வு மையத்தில் சேர்ந்ததில் இருந்தே தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு மேலாளரிடம் கெஞ்சியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 17-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து சுதாரின் மாமாவுக்கு மைய மேலாளர் தகவல் தெரிவித்தார். அப்போது தங்கள் மருமகன் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மரணம் குறித்து காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் போதை மறுவாழ்வு மையம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சுதாரின் இறப்பு ஒரு கொலை என்று தெரியவந்தது.
வீட்டிற்கு அனுப்பாததால் ஆத்திரம் அடைந்த சுதார் கழிவறை சென்று மணிக்கட்டை அறுத்துக்கொண்டார். இதனை அறிந்த சிகிச்சை மையத்தின் ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு அறையில் அடைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து சுதாரின் கை, கால்களை பிடித்து கட்டிபோட்டு பிளாஸ்டிக் பைப்பை எடுத்து சுமார் இரண்டு மணி நேரம் கொடூரமாக அவரை தாக்கியுள்ளனர். மேலும் பைப்பை சுதாரின் அந்தரங்க உறுப்பில் மாட்டி நெருப்பை பற்ற வைத்துள்ளனர்.
newstm.in