வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும்போது கட்டிடம் இடிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், சர்வீஸ் சாலையிலும் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களை கட்டியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று முதல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி, ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றப்பட்டு வருகின்றது.
இன்று ஒரு இரண்டு மாடி கட்டிடத்தை ஹிட்டாச்சி வாகனத்தின் மூலம் இடிக்கும் பணி நடந்தது. அந்த ஹிட்டாச்சி வாகனத்தை நல்லுச்சாமி என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கட்டிடம் இடிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நல்லுச்சாமி காயங்கள் இன்றி உயிர் தப்பினார். கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஹிட்டாச்சி வாகனம் லேசாக சேதம் அடைந்தது. இதனை அந்த பகுதியில் இருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்தக் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.