புதுச்சேரி: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார். இப்பட்ஜெட்டில் வழக்கம்போல் வரி விதிக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மகளிருக்கு அதிகளவில் சிறப்பு திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.
இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1000 கோடி அதிகம். இச்சூழலில் மத்திய அரசாங்கம் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கடந்த 9ம் தேதி மாலை ஒப்புதல் அளித்தது.
எத்தனை கோடிக்கு ஒப்புதல் என்பது பட்ஜெட் தாக்கலாகும்போது தான் தெரியவரும். புதுச்சேரியில் முழு பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் ஆக உள்ள நிலையில், பட்ஜெட்டில் பெண்களுக்கு பல நல திட்டங்கள் அறிவிக்கப்படும் என அண்மையில் நடந்த மகளிர் தினவிழாவில் ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டிருந்தார்.
அதனால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அதேநேரம், வழக்கம்போல் இம்முறையும் வரியில்லா பட்ஜெட்டே தாக்கலாகும் என்றும் கருத்துகள் வெளியாகியுள்ளன. வரும் 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் இம்முறை பட்ஜெட்டில் அனைவரையும் கவரும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.