மாநிலங்களுக்கு பதிலாக மருந்து தயாரிப்பை ஒன்றிய அரசே கட்டுப்படுத்தும்: புதிய மசோதா விரைவில் தாக்கல்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு பதிலாக ஒன்றிய அரசே மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் புதிய வரைவு மசோதாவை அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆலோசனைக்கு ஒன்றிய அரசு அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ், நாட்டில் வழங்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. மேலும், மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் இணைந்து, மருந்து உற்பத்தி அலகுகளில், கூட்டு ஆய்வு நடத்துகிறது.  தற்போதைய சூழலில், மருந்து மற்றும் அழகு சாதனங்களின் உற்பத்தி மற்றும் அது சார்ந்த விவகாரங்களை நிர்வகிக்க அனைத்து மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

மருந்து தயாரிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து வருகிறது.  இந்நிலையில், புதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிப்பை மாநில அரசுகளுக்கு பதிலாக ஒன்றிய அரசே கட்டுப்படுத்த வேண்டும் என்ற புதிய  மசோதாவை ஒன்றிய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரல் தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பான வரைவு மசோதா குறித்த பொதுமக்களின் கருத்துகளை பெற ஒன்றிய அரசு இதனை கடந்தாண்டு ஜூலை மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.  இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு பொதுமக்களின் கருத்துகளை பெற்று, அதன்படி திருத்தங்கள் செய்து அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வரைவு மசோதாவை இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட்  தொடரின் 2வது கூட்டத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 2023-ன்படி, மருந்துகள், அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை மட்டும் அந்தந்த மாநிலங்களுக்கு கீழ் வரும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இ-மருந்தகம் நடத்துவதற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஆன்லைனில் மருந்துகள் விற்கவும், இருப்பு வைக்கவும், காட்சிபடுத்தவும், விற்பனை சலுகை அல்லது வினியோகிப்பதை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த அல்லது தடை விதிக்க உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், பல புதிய சர்சைக்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.