சிவகங்கை: ‘பி’ டீமை வைத்து அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இருக்காது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையில் நேற்று நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: எங்களது ஆட்சியில் அதிக போராட்டங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளித்தோம். ஆனால் திமுக ஆட்சியின் ஊழலை மக்களுக்கு கொண்டு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தர மறுக்கின்றனர்.
திறமையற்ற, பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். ‘பி’ டீமை (ஓபிஎஸ்) வைத்து கொண்டு அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லை என்ற நிலை ஏற்படும். கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?
திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல், கொள்ளை அதிகரித்துள்ளன. நான் சர்க்கரை வியாபாரியாக இருந்தவன். நல்ல வெல்லம் பல இடங்களில் கிடைக்கும்போது, ஊழல் செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து வெல்லத்தை வாங்கி வந்து, மக்களுக்கு ஒழுகும் வெல்லத்தை வழங்கினர்.
திமுக கார்ப்பரேட் நிறுவனம். ஸ்டாலின் தலைவர், இயக்குநர்களாக உதயநிதி, கனிமொழி உள்ளனர். 22 மாதங்களில் மக்கள் விரோதத்தை சந்தித்த ஒரே கட்சி திமுக. உதயநிதியை அமைச்சராக்கியதுதான் திமுகவின் சாதனை. உதயநிதியால் 150 திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கருணாநிதிக்கு பேனா வைப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதாத பேனாவுக்கு ரூ.2 கோடியில் அவரது நினைவிடத்திலோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ சிலை வைக்கலாம். மீதி ரூ.79 கோடியில் மாணவர்களுக்கு எழுதும் பேனாக்களை வாங்கி கொடுக்கலாம்.
ஸ்டாலின் தலைவராக இருந்து மக்களை பார்க்கிறார். நான் தொண்டனாக இருந்து பார்க்கிறேன். தலைவர் முக்கியமில்லை. தொண்டன் தான் முக்கியம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை முடக்கியது தான் திமுகவின் சாதனை. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலனை கொடுத்தோம்.
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை. அதேபோல் தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
பழனிசாமிக்கு எதிராக கோஷம்: முன்னதாக மதுரை விமான நிலையத்துக்கு வந்த பழனிசாமி, விமான ஓடுதளத்திலிருந்து முகப்பு பகுதிக்கு பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய சிவகங்கை மாவட்டம் எம்.வையாபுரிபட்டி ராஜேஸ்வரன்(42) என்பவரும் வந்தார். அப்போது அவர் திடீரென பழனிசாமிக்கு எதிராக அவதூறு கூறி முழக்கமிட்டார். அதனை பேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டார். அவரை பழனிசாமியின் பாதுகாவலர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை பழனிசாமியின் மற்றொரு பாதுகாவலர், தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் ராஜேஸ்வரனை அவனியாபுரம் போலீஸில் ஒப்படைத்தனர்.