திருச்சி: திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று உயிரிழந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 36 ஆகவும், திருச்சியில் பாதிப்பு 6 ஆகவும் இருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகையில், பெங்களூருவில் பணியாற்றி வந்த உதயகுமார், அண்மையில் நண்பர்கள் 3 பேருடன் கோவா சென்றுவிட்டு திரும்பியுள்ளார். இதனால், உதயகுமார் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரும் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த உதயகுமாரின் உடல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.