நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக சார்பில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின. மேலும் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 7,000க்கும் மேற்பட்ட போலீசார் வந்திருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்த அதிவிரைவு படையினர் நெய்வேலி வடக்குத்து காவல்நிலையம் அருகில், நேற்று முன்தினம் நள்ளிரவு தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென்று அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் தீயை அணைத்தனர். இதனால் அதி விரைவு படை வாகனத்தின் முன் பகுதி மட்டும் கருகி சேதமடைந்தது. மர்ம நபர்கள் யாரேனும் திட்டமிட்டு தீ வைத்திருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தடயவியல் துறையினர் நடத்திய சோதனையில்,மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.