சென்னை: நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரிஷின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கி உள்ளனர்.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த 26-ம் தேதி திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் செய்திருந்தார்.
இதில், இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யூ-டியூப் பிரபலங்கள் கோபி-சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலு விழாவுக்கு செல்லாத நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீடு தேடிச் சென்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கினர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்.
பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டிய கவுரவ டாக்டர் பட்டங்களை, தனியார் அமைப்பு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது போலி கவுரவ டாக்டர் பட்டம் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆம்பூரில் தலைமறைவாக இருந்த ஹரிஷை சமீபத்தில் கைது செய்தனர். அவரது கூட்டாளி ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹரிஷின் வங்கிக்கணக்கை போலீஸார் முடக்கி உள்ளனர். அவரது பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அவர் இதுவரை 50 பேருக்கு மேல் போலியாக டாக்டர் பட்டம் வழங்கியதாகவும், சிலருக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.