புதுடெல்லி: அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும் நடத்தப்பட்ட தண்டி யாத்திரை எப்போதும் நினைவு கூரப்படும் என பிரதமர் மோடி கூறினார். கடந்த 1930ம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாகிரகம் தண்டி யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தண்டி யாத்திரை மிக முக்கிய நிகழ்வாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது,1930 மார்ச் 12ம் தேதி அகமதாபாத்,சபர்மதி ஆசிரமத்தில் இருந்து கடலோர கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
பிரிட்டிஷ் அரசு அமல்படுத்திய விதிகளை மீறி கடலில் கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டது. இதன் மூலம் உப்பு எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த உப்பு சட்டத்தினை போராட்டக்காரர்கள் மீறினர். இதுதொடர்பாக பிரதமர் டிவிட்டரில் பதிவிடுகையில், அநீதியை எதிர்த்தும், நாட்டின் சுயமரியாதையை பாதுகாக்கவும், தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தியடிகள் மற்றும் அவருடன் சென்ற தலைசிறந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.