தமிழகத்தில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்: அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை!

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரஸான எச்3என்2 பரவி வருகிறது. ஜனவரி 2ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மட்டும் 450க்கும் மேற்பட்டோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் இத்தகைய தொற்று பரவல் வாடிக்கை தான் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

அதே சமயம் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகவில்லை. வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பரவலில் போது கடைப்பிடித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார்கள்.

இது குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள், மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என, ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், அவர்கள் வெளியில் வந்து இருமும் போது, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவக்கூடும். வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து பதற்றப்பட தேவையில்லை. தமிழகத்தில், காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் பின்பற்ற வேண்டியவை!

பொது இடங்களில் கூடும் போது, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், தங்கள் வீடுகளில், தேவையற்ற பொருட்களில், தேங்கி இருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும்.

அரசு எடுக்கும் நடவடிக்கை!

அனைத்து மருத்துவமனைகளிலும், காய்ச்சலுக்கான மருந்துகள் தயாராக உள்ளன. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியை, உள்ளாட்சி அமைப்புகள் செய்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில், ‘ட்ரோன்’ வழியே கொசு மருந்து, நீர் நிலைகளில் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ‘ஸ்பிரே’ இயந்திரங்கள் வழியாக, கொசு மருந்து அடிக்கும் பணியை, மலேரியா தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்”
என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.