மும்பை: லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் துறை நேற்று கூறியது: மார்ச் 11-ம் தேதி லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ரமகாந்த் (37) என்பவர் பயணம் செய்துள்ளார். அமெரிக்க குடிமகனான அவர் சக பயணிகளிடமும், விமான பணியாளர்களிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விமானத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார். பின்னர், விமானத்தின் கழிவறைக்கு சென்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் புகைப்பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக, மும்பை சாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமகாந்த் போதையில் அல்லது மனநிலை சரியில்லாமல் இத்தகைய செயல் களில் ஈடுபட்டாரா என்பதை உறுதி செய்வதற்காக அவருடைய மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.