பயமின்றி தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம் – பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: எவ்வித பயமும், தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொண்டால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் அடுத்தடுத்து தொடங்க உள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

பேரன்புக்குரிய 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளே. தேர்வு பற்றிய கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு தேர்வு, அவ்வளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள். உங்களுக்கு தேவை தன்னம்பிக்கையும், மன உறுதியும்தான். அது இருந்தாலே பாதி ஜெயித்துவிட்டீர்கள்.

எந்தவிதமான தயக்கமும் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து, புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள்போல நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன். நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். புதிய துறைகளும், தொழில்நுட்பங்களும் உருவாகியிருக்கும் இக்காலத்தில், மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள்தான் ஏற்படுத்துகின்றன. அதை கருத்தில்கொண்டு அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் அச்சமின்றி எழுத வேண்டும். மாணவர்களை மதிப்பெண்கள் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாமல் மன அழுத்தம் இன்றி தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் மாணவர்கள் வாய்ப்புகளை பெற வேண்டும்.

மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ: மாணவர்கள் எவ்வித பதற்றமோ, அச்சமோ இல்லாமல் இயல்பாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

வி.கே.சசிகலா: பொதுத் தேர்வை நினைத்து பயம் கொள்ளாமல், தைரியமாக எழுதுங்கள். எந்தவொரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். மாணவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.

டிஜிபி சைலேந்திர பாபு: தேர்வு எழுத செல்லும்போது ஒரு பேனா, பென்சிலுக்கு பதிலாக இரண்டு பேனா, பென்சில் எடுத்துச் செல்லுங்கள். வினாத்தாளை ஒருமுறைக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து விடை எழுத வேண்டும். எந்த கேள்விக்கு விடை நன்றாக தெரிகிறதோ அவற்றை முதலில் எழுதி முடிக்கவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.