பாஜகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவின் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தமிழக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது. பா.ஜ.க.வினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியது குறித்து மவுனம் காத்த முதல்வர் ஸ்டாலின், தற்போது பா.ஜ.க.வினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் இதுபோன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதேபோன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால் தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் தி.மு.க.வே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.