கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-24 தொடங்கியது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொது பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்குகிறது.
இரண்டாவது அமர்வு
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் நிதி மசோதாவை நிறைவேற்ற அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே, பஞ்சாயத்து ராஜ், சுற்றுலா, சுகாதாரம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 35 மசோதாக்கள்
அதில், மாநிலங்களவையில் 26, மக்களவையில் 9 மசோதாக்கள் அடங்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவுள்ளதால் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் அமர்வில் எதிரொலித்த அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான பிரச்சினையை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அதானி சர்ச்சை
போலியான நிறுவனங்களை தொடங்கி சர்வதேச அளவில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரை ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சிக்க இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளன.
எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்த பிரச்சினையை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளனர். அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது, பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை,
காங்கிரஸ் வியூகம்
தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் சிபிஐ விசாரணை உள்ளிட்டவை இடம்பெறக் கூடும். இதுகுறித்து இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றன. இது காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் நடைபெறுகிறது. இதையடுத்து காங்கிரஸ் எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை
இதில் தங்கள் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும். தமிழ்நாட்டு எம்.பிக்கள் இரண்டு விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளனர். அவை, நீட் விவகாரம், ஆன்லைன் ரம்மி விவகாரம். இதுதவிர மாநில நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பர். இன்றைய தினம் மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முன்வைக்கப்படும்.