பெங்களூரு: ‘‘நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன்’’ என பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் இருந்து 6-வது முறையாக நேற்று கர்நாடகாவுக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மைசூரு விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு சென்றார். அங்குள்ள ஐ.பி. சதுக்கத்தில் இருந்து 2 கிமீ தூரத்துக்கு மோடி திறந்த காரில் நின்றவாறு ஊர்வலமாக சென்றார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மோடியின் மீதுபூக்களைத் தூவி வரவேற்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு மோடி, வாகனத்தின் மீது குவிந்திருந்த பூக்களை அள்ளி தொண்டர்களின் மீது வீசி உற்சாகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து பெங்களூரு – மைசூரு இடையே ரூ.8,480 கோடி செலவில் 118 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட 6 வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையில் பயணித்தால் 75 நிமிடங்களில் பெங்களூருவில் இருந்து மைசூருவை அடையலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
பின்னர் மண்டியாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த சில நாட்களாக பெங்களூரு மைசூரு சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களில் நின்று இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு – மைசூரு ஆகிய இரு முக்கியநகரங்களும் பல்வேறு வகையில் பலன்பெறும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால் தொழில் துறையினர் மட்டுமல்லாம் ஏழைகளும் பலன்பெறுகிறார்கள். இத்தகைய அதிநவீன வசதிகள் அனைவரின் வாழ்க்கைக்கும் உதவுகின்றன. ஆனால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்தது.
கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 9 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் லட்சக்கணக்கான வீடுகள் கர்நாடக மக்களுக்கு கிடைத்துள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 40 லட்சம்வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நான் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் என்னை குழி தோண்டி புதைப்பதிலே குறியாக உள்ளன. ஆனால் நானோ நாட்டு மக்களுக்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதி வழங்குவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவை வளர்ச்சி அடைய செய்வதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதையடுத்து மோடி மைசூரு – குஷால் நகர் இடையேயான நெடுஞ்சாலை, தார்வாட் – ஹுப்ளி நெடுஞ்சாலை உட்பட ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.