உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாத் தொற்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த கொரோனாத் தொற்றில் உலக நாடுகளில் கோடி கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒன்றிய அரசுகள் தொற்று பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து இந்த கொரோனாத் தொற்று கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் குறைந்து வந்ததால் உலக நாடுகள் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் பொதுமக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இருப்பினும் கொரோனாத் தொற்று குறைந்த அளவில் இருந்துகொண்டே இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. அதன் படி, தமிழகத்தில் நேற்று முன்தினம் தினசரி தொற்று பாதிப்பு 40-ஐ கடந்து பதிவாகி உள்ளது.
இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் எச்3என்2 என்ற இன்ப்ளூயன்சா தொற்று பரவி வருவதால், மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்ததாவது:
“தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்போருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டு பின்னர் கொரோனாத் தொற்றின் வகையை அறிவதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், புதிய வகை வைரஸ் பரவுகிறதா என்பதை கண்டறிவதற்கு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனை மரபணு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.