புதுடெல்லி: கேரள மாநிலம் குன்னமங்கலத்தை சேர்ந்த கரீம் கடந்த 2006-ம் ஆண்டு கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். குன்னமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது கொலையில் தொடர்புடைய முகமது ஹனீபா மக்கதா வெளிநாடு தப்பிவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட ஹனீபாவுக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹனீபா சவுதியில் இருப்பதாக சிபிஐ-க்கு இன்டர்போல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை கேரள போலீஸாருக்கு சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து சவுதி சென்ற கேரள போலீஸார் குழு, ஹனீபாவை கைது செய்து இந்தியாவுக்கு நேற்று அழைத்து வந்தது.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை இன்டர்போல் உதவியுடன் கண்டுபிடித்து தாயகம் அழைத்து வருவதற்காக, சிபிஐ அமைப்பு ஆபரேஷன் திரிசூல் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை ஹனீபா உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.