2018-ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு காதல் குற்றமற்றது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாக்கவில்லை. இந்த நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தன்பாலின திருமணத்தை அங்கிகரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமானதாக அங்கிகரிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், “இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கான அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது. திருமணம் என்ற கருத்தாக்கமானது, எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையேயான ஒரு கூட்டணியை அவசியமாகவும், தவிர்க்க முடியாததாகவும் மாற்றுகிறது. இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் திருமணம் எனும் கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளது.
எனவே இந்த கருத்தாக்கம் நீதித்துறை விளக்கத்தால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீர்த்துப்போகவோ கூடாது. கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் எனப்படும் இந்திய குடும்ப கருத்துடன் தன்பாலின உறவை ஒப்பிட முடியாது. ஆண் கணவனாகவும், பெண் மனைவியாகவும் இருந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் அவர்களே தந்தையாகவும் தாயாகவும் பரிணமிக்கிறார்கள். எனவே, தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காதது அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாது” என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.