புதுடெல்லி: அமெரிக்காவின் SVB வங்கி திவாலாகி இருப்பது, இந்திய நிதித்துறை கட்டமைப்பை பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட அந்நாட்டின் 16வது பெரிய வங்கியான சிலிகான் வேல்லி பேங்க்(SVB) திவாலானதை அடுத்து அந்த வங்கி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த வங்கி, கடந்த 2008ம் ஆண்டில் இருந்தே நிதி நெருக்கடியில் சிக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
SVB வங்கி திவாலானதை அடுத்து அதன் நிர்வாகம் FDIC எனப்படும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைடுத்து, SVB-யின் நிதிநிலை குறித்த அறிக்கையை FDIC வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த வங்கியின் மொத்த சொத்துமதிப்பு 209 பில்லியன் டாலர்; வங்கியில் உள்ள வைப்புத் தொகை 175.4 பில்லியன் டாலர். SVB வங்கி திவாலானதை அடுத்து அமெரிக்க நிதிச் சந்தை பாதிப்பை எதிர்கொள்ளத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இது இந்திய நிதிச் சந்தையை பாதிக்குமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு தி இந்த பிஸினஸ் லைன் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், SVB வங்கி திவாலானதால் இந்திய நிதிச் சந்தை பெரிய பாதிப்புகள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கிகள் மற்றம் நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு வலிமையாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என கணிக்கப்படுகிறது. இரண்டாவதாக, SVB வங்கி செயல்பட்ட விதம்தான் அதன் தோல்விக்குக் காரணம் என்றும் எனவே, அதை மற்ற வங்கி நிர்வாகத்தோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் SVB வங்கிக்கு ஏற்பட்ட நிலை, பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்றும் அதேபோல், ஸ்டார்ட் அப் நிறுவன சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று மத்திய அரசின் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.