முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி ஒன்று காயத்துடன் சுற்றித்திரிந்தது.
வனத்துறையினர் இந்த குட்டியை மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன் கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையை பராமரித்து வந்தார். இந்நிலையில், இந்த குட்டி யானையை முதுமலை கொண்டு சென்று பராமரிக்க கிருஷ்ணகிரி வனத்துறையினர் ஆலோசித்தனர்.
இதற்கு முதன்மை வனப்பாதுகாவலர் அனுமதி அளிக்கவே, இந்த குட்டி யானை கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு வரப்பட்டது. இந்த குட்டி யானையின் பராமரிப்பாளர்கள் தான் பொம்மனும், பெள்ளியும். குட்டி யானைக்கு ரகு என்ற பெயர் வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு, தாயை பிரிந்த மற்றொரு யானையான பொம்மியையும் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானைக் குட்டிகளை பராமரிக்கும் பழங்குடித் தம்பதியரின் கதையை ஆவணப் படமாக்கி இருந்தார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கன்சால்வ்ஸ். கார்த்திகி கன்சால்வ்ஸ் இயக்கத்தில், குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டது.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வரும் இந்தத் தம்பதிகளுக்கும், யானைகளுக்கும் இடையே இருக்கும் உணர்வு பூர்வமான உறவை கதையாகக் கொண்டது ‘தி எலிபெண்ட் விஸ்பரரஸ்’ ஆவணப்படம். பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரே குடும்பமாக மாறுகிறார்கள்.
இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது. ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.
இது குறித்து முதுமலை தம்பதி கூறும் போது, “படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க தொடங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது தான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறினார்.
இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து படம் எடுத்தனர். அவ்வப்போது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறிது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர்’ என்றனர்.
சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஆஸ்கர், தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்தது பற்றி கூறிய போது, ‘அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத் தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்து வந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பது சிறிது வருத்தமாக உள்ளது” என்றனர்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும் போது, “இந்த ஆஸ்கார் குறும்படம் ரகுவை கவனித்துக் கொண்டிருந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி பற்றியது. தற்போது முதுமலை முகாமில் ஒரு ஆண் குட்டி யானையும், பொம்மி என்ற பெண் குட்டி யானையும் உள்ளன. இரண்டு குட்டி யானைகள் எப்படி பராமரிக்கப்பட்டன என்பதையும், இந்த குட்டி யானைகளுடன் தொடர்புடைய இருவரின் வாழ்க்கையையும் வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பொம்மன் மற்றும் பெள்ளிக்கு வாழ்த்துக்கள். இப்போதும் கூட தர்மபுரி வனக் கோட்டத்தில் தாயிடம் இருந்து பிரிந்த யானைக் குட்டியை படத்தின் நாயகன் பொம்மன் பராமரித்து வருகிறார்” என கூறினார்.