ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ஆஸ்கர் மேடையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர்.
இதனையடுத்து சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் மேடையில் விருதை பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, “And must put me on the top of the world” என்று ராகத்தில் பாடி நன்றி தெரிவித்தார்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் `சிறந்த ஒரிஜினல் பாடல்’ என்ற விருதை இப்பாடல் தட்டிச் சென்றிருந்தது. தென்னிந்தியத் திரைப்பட பாடல் ஒன்று ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்று வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
நாட்டு நாட்டு பாடலுடன் சேர்த்து, Applause என்ற பாடல் (Tell it like a woman படத்துக்காக, Diane Warren எழுதி இசையமைத்தது), Hold my Hand என்ற பாடல் (Top Gun: Maverick படத்துக்காக, Lady gaga Bloodpop எழுதி இசையமைத்தது), Lift me up என்ற பாடல் (Black Panther: Wakanda Forever படத்துக்காக Ryan Coogler Tems எழுதி Tems, Rihanna, Ryan Coogler, Ludwig Goransson இசையமைத்தது ) , This is a life Everything படத்துக்காக, Ryan Lott, David Byrne எழுதி Everywhere all at once Ryan Lott, David Byrne, Mitski இசையமைத்தது) ஆகியவையும் இறுப்பட்டியலில் தகுதிபெற்றிருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கீரவாணி. 2009ல் Slumdog Millionaire படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருந்த நிலையில், தற்போது RRR படத்திற்காக ஆஸ்கர் விருதை கீரவாணி பெற்றிருக்கிறார்.