நீங்கள் வெறும் பிரதமர் மட்டுமே, கடவுள் இல்லை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பதிலடி

டெல்லி : ஜனநாயகம் மீது பாஜக நடத்தும் தாக்குதல் காரணமாகவே அது குறித்து பேச வேண்டி இருப்பதாக ராகுல் காந்தி மீதான பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திய ஜனநாயகம் குறித்து பேசி நாட்டு மக்களை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி சாடினார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரசின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜனநாயகம் மீது நீங்கள் நடத்தும் தாக்குதல் காரணமாகவே அது குறித்து பேச வேண்டி இருப்பதாக பவன் கேரா கூறியுள்ளார். மறைந்த தலைவர்களை விமர்சிப்பதிலேயே கடந்த 9 ஆண்டுகளை பிரதமர் வீணடித்துவிட்டதாக அவர் சாடினார். கடந்த 75 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை என்று கூறும்போது, 3 தலைமுறையினரை மோடி அவமதித்துவிட்டதாக பவன் கேரா தெரிவித்துள்ளார்.

லண்டன் விழாக்களில் இந்தியாவில் பிறந்த மக்களிடமே ராகுல் காந்தி உரையாற்றியதை சுட்டிக் காட்டி இருக்கும் பவன் கேரா, ஜனநாயகத்தை வலுப்படுத்தவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்பு ராகுல் காந்தி பேசியதாக குறிப்பிட்டு இருக்கிறார். வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் மீது சோதனையை ஏவிவிடும் மோடி,  நாட்டின் நற்பெயர் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் விமர்சித்துள்ளார். மோடி வெறும் பிரதமர் மட்டுமே, கடவுள் இல்லை என்றும் பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.