திருச்சி: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எச்3என்2 என்ற இன்புளுயன்சா வகை காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்புளுயன்சா காய்ச்சலுக்கு நாடு முழுவதும் ஒரு சில உயிரிழப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு என்பது பூஜ்ஜிய நிலையில் இருந்தது. இதனிடையே திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த 27 வயது இளைஞர், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றுவிட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9ம் தேதி திருச்சிக்கு வந்துள்ளார்.
10ம் தேதி இளைஞருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல கோளாறும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில மரபணு பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனை செய்ததில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.