Board Exam 2023: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் 1:15 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் அவர்களது தேர்வு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்துவிட்டு அந்தந்த அறைகளுக்கு சென்றனர்.
மேலும் தேர்வர்கள் தேர்வறைக்குள் செல்லும் முன்பு அறைக் கண்காணிப்பாளர்கள் அவர்களது உடமைகளை சோதனை செய்து அதன்பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்து கொண்டிருக்கும் தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசிய அவர், கோவையில் 128 சென்டரில் 35 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்றும், அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டர்.
12 ம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும். 180 பறக்கும் படையினர் ஆய்வுப் பணியில் உள்ளனர்.காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.