நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) காலை தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் முதல் ரெய்டு நடவடிக்கைகள் வரை பல விஷயங்களை எழுப்ப திட்டமிட்டிருந்தன. இந்த சூழலில் லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை ஆளுங்கட்சி கையிலெடுத்தது. அவரது பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேச்சு
இந்த அவையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அனைத்து இந்தியர்களிடம் ராகுல் காந்தி தனது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்திய ஜனநாயகம்
மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நமது ஜனநாயகம் இயங்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து இரு அவைகளிலும் மாறி மாறி கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இரண்டாவது அமர்வின் முதல் நாளே அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற செலவுகள்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளிற்கும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து டெல்லி வந்து எம்.பிக்கள் தங்கும் வசதி, உணவு வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படுகின்றன. இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்திலும் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படுகிறது.
மக்களின் வரிப்பணம்
இவ்வாறு அரசியல் கட்சியினரின் அமளியால் அவை ஒத்திவைக்கப்படுவது, முடக்கப்படுவது போன்றவற்றால் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் செலவிடப்பட்ட தொகை வீணாகும் நிலை தான் உண்டாகிறது. இன்றைய தினமும் அப்படித் தான் நடந்துள்ளது. ஆரோக்கியமான விவாதங்களும், மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களும் நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
லண்டனில் பேசியது
முன்னதாக லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கிராண்ட் கமிட்டி ரூமில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் எம்.பியாக இருப்பது மிகவும் கடினம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளுங்கட்சி மதிப்பு அளிப்பதில்லை. சாமானியர்களின் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வருகிறது.
கடும் விமர்சனம்
ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது. நாட்டின் சுதந்திரமான அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ், பாஜக அமைப்புகள் ஊடுருவி வருகின்றன. எனவே தான் மீண்டும் சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன். பாஜகவை யாராலும் வெல்ல முடியாது என ஊடகங்களில் திட்டமிட்டு ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
ஆனால் நான் மக்கள் சொல்வதையே கேட்கிறேன். சர்வதேச அளவில் இந்தியாவிற்கு முக்கியமான இடமிருக்கிறது. எனவே தற்போதைய கொந்தளிப்பை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.