சுங்கச் சாவடி கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், ஏறத்தாழ 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதில் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் அதன் காலஅளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவை மூடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் திட்ட ஆணையம் தன்னிச்சையாக கட்டண உயர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், 60 கி.மீ. இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று மத்தியஅரசு ஏற்கெனவே அறிவித்தும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பல பகுதிகளில் சாலைகள் சரிவரப் பராமரிக்கப்படாத நிலையில், சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு என்பது நியாயமற்றது. இதனால் வாகன வாடகை உயர்ந்து, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகணிசமாக உயரும் நிலை ஏற்படும்.
எனவே, சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.